
ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து இந்த தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி (10.05.2025) மாலை 05.00 மணியளவில் இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று (14.05.2025) டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காலை 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாகிஸ்தான் விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய கொள்கை முடிவுகள் குறித்தும், பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவது தொடர்பாகவும், எதிர்கால ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.