பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வந்த நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் அடுத்த முப்பது நாட்களுக்கு அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் திருப்பதி தேவஸ்தானம், யெஸ் வங்கியில் வைத்திருந்த ரூ.1300 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகை மற்றும் நகை ஆகியவற்றை எடுத்தது. வங்கி சேவைகள் முடங்கும் முன்பு திருப்பதி தேவஸ்தானம் சரியாக எப்படிப் பணத்தை எடுத்தது என்பது குறித்து, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறும்போது, "வங்கியின் நிதிநிலை மோசமாக இருந்ததை நான் ஏற்கெனவே உணர்ந்திருந்தேன். வங்கியின் நிதி நிலையை எனக்கு முன்கூட்டியே புரியவைத்து பணத்தைப் பாதுகாக்க உதவிய இறைவனுக்குத்தான் அனைத்து நன்றியும் போய்ச் சேரும்" எனத் தெரிவித்துள்ளார்.