
தனது சொந்த தந்தையை கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறி மகன் நாடகமாடிய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நாகேஷ் (55). இவரது மகன் சூர்யா. இவர்கள் இருவரும் கடந்த 11ஆம் தேதி அப்போலோ ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் இருந்தனர். அப்போது, தந்தை நாகேஷ் மின்சாரம் தாக்கி இறந்ததாக சூர்யா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து அங்கு வந்த குடும்பத்தினர், நாகேஷின் உடலை கண்டு கதறி அழுதனர். இதில், நாகேஷின் சகோதரி சவிதா, நாகேஷ் இறப்பில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்துள்ளார்.
அதனால், இந்த சம்பவம் குறித்து சவிதா காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அப்போலோ ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தந்தையின் கழுத்தை நெரித்து சூர்யா கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியானது.
அந்த சிசிடிவி கேமரா காட்சியில், அதிகாலை 1:45 மணியளவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகேஷ், தனது மகன் சூர்யாவை அறைந்தார். இதையடுத்து, அவர் ஒரு செருப்பை எடுத்து சூர்யாவை அடித்தார். அதன் பின்னர், ஒரு குச்சியை எடுத்து சூர்யாவை அடிக்க, சூர்யா தனது தந்தையை தடுக்க முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு போன சூர்யா, ஒரு வெள்ளை துணியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்கிறார் என்று அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
இதனை கண்ட போலீசார், சூர்யாவிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நாகேஷை கொலை செய்த பிறகு, சூர்யாவும் அவரது நண்பரும் நாகேஷை ஒரு படுக்கையில் படுக்க வைத்து அவரது விரல்களில் மின்சாரம் பாய்ச்சி தனது குடும்பத்தினரிடம் நாடகமாடியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சூர்யாவை கைது செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன? தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து பகை இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.