உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக பரவுலியா கிராமம் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திரா சிங் உதவி வந்தார்.
அவருக்காக பிரச்சாரங்கள், பேரணிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். இந்த நிலையில் சுரேந்திரா சிங், கடந்த 25 ஆம் தேதி 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து நடந்த இறுதி ஊர்வலத்தில் உதவியாளர் சுரேந்தர் சிங்கின் உடலை ஸ்மிரிதி இரானி சுமந்து சென்றார்.
இதையடுத்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டிருந்தார். சுரேந்திர சிங்குக்கும் காங்கிரஸ் கட்சி உள்ளூர் பிரமுகர்களுக்கும் இடைய முன்விரோதம் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், இதுகுறித்து அமேதி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறும்போது, “சுரேந்திர சிங்குக்கும் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் இடையே இருந்துவந்த முன் விரோதம் காரணமாகவே சிங் கொல்லப்பட்டிருக்கலாம்” என்றார். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.