Skip to main content

சென்செக்ஸில் 133 பங்குகள் 'கிடுகிடு!'; 10,500 புள்ளிகளை நோக்கி நிப்டி!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

Indian stock markets

 

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டது, முதலீட்டாளர்களிடையே மேலும் உற்சாகத்தை கூட்டியிருக்கிறது. நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று (ஜூன் 22) வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10,311.20 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 34,892 புள்ளிகளிலும் முடிவடைந்தது. சென்செக்ஸில் 133 பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டதால், முதலீட்டாளர்கள் பலரும் பங்குகளை விற்று லாபம் பார்த்தனர்.


கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று (ஜூன் 19) நிப்டி 10,244.40 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. திங்கள்கிழமை (ஜூன் 22) நிப்டியின் வர்த்தகம் 10,300 புள்ளிகளுக்கு மேல் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே நிலவியது. அதன்படி, நேற்று வர்த்தகத்தின் தொடக்கமே 10318 புள்ளிகளாக இருந்தது. அதிகபட்சமாக 10,398.65 புள்ளிகள் வரையிலும் சென்றது. குறைந்தபட்சமாக 10,277 புள்ளிகளும் பதிவானது. இறுதியில், 10,311.20 புள்ளிகளுடன் நிப்டியில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இது முந்தைய நாளைக் காட்டிலும் 0.65 சதவீதம் ஏற்றமாகும்.

 

நிப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் 37 பங்குகளின் விலைகள் கணிசமாக ஏற்றம் கண்டன. 13 பங்குகளின் மதிப்பு சற்று சரிவடைந்தன. 

 

நிப்டியில் ஏற்றம், இறக்கமும் கண்ட பங்குகள்:

 

தேசிய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ 7.09 சதவீதம், பஜாஜ் பைனான்ஸ் 5.95 சதவீதம், பஜாஜ் பின்சர்வ் 4.78 சதவீதம், கோல் இண்டியா 4.70 சதவீதம், வேதாந்தா 4.51 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. அதேநேரம், விப்ரோ, கெயில், ஓஎன்ஜிசி, ஹெச்.டி.எப்.சி., ஹிண்டால்கோ ஆகிய பங்குகளின் மதிப்பு சற்று வீழ்ச்சி அடைந்தன. 

 

நிப்டியில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஆட்டோமொபைல், பைனான்ஸ், எப்எம்சிஜி, ஊடகம், உலோகம், பார்மா, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சார்ந்த பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை வழங்கின.


நிப்டியில் நேற்று வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,985 நிறுவனங்களில், 1,361 பங்குகள் மதிப்புகள் உயர்ந்தும், 554 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகம் ஆகின. 70 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

 

Indian stock markets

 

சென்செக்ஸ் நிலவரம்: 


மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான ஜூன் 19ஆம் தேதி, 34,731.73 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை 34,892.03 புள்ளிகளுடன் விறுவிறுப்பாக வர்த்தகத்தை தொடங்கியது சென்செக்ஸ். இதனால் முதலீட்டாளர்களும் தொடக்கத்தில் இருந்தே உற்சாகம் அடைந்தனர்.

 

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக 35,213.52 புள்ளிகள் வரை உயர்ந்தது. குறைந்தபட்சமாக 34,794 புள்ளிகளுக்கும் சென்றது. வர்த்தக நேர முடிவில் 34,911.32 புள்ளிகளுடன் சென்செக்ஸிஸ் வர்த்தகம் முடிவுக்கு வந்தது. அதாவது முந்தைய நாளைக் காட்டிலும் 179.59 புள்ளிகள் (0.52%) உயர்வுடன் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

 

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 20 பங்குகளின் விலைகள் ஏற்றம் கண்டன. 10 பங்குகளின் மதிப்பு லேசாக சரிவடைந்தன. 


பி.எஸ்.இ. நிலவரம்: 


பி.எஸ்.இ. பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகத்தில் ஈடுபட்ட 2,917 நிறுவனங்களில் 1,858 பங்குகளின் விலைகள் உயர்ந்தன. 898 பங்குகளின் விலைகள் சற்று இறங்கின. 161 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. 

 

உச்சத்தில் 133 பங்குகள்:

 

சென்செக்ஸில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு 133 பங்குகளின் விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டன. இதனால் முதலீட்டாளர்கள் கணிசமான ஆதாயம் அடைந்தனர். அதேபோல், 563 பங்குகள் அதிகபட்ச இலக்கை எட்டிப்பிடித்ததும் சில்லரை முதலீட்டாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

அதிக ஆதாயம் அளித்த பங்குகள்:


மும்பை பங்குச்சந்தையில் கிளென்மார்க் 27 சதவீதம், இண்டியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் 18 சதவீதம், பிடிசி 14 சதவீதம், இந்தியன் வங்கி 14.40 சதவீதம், பினோலெக்ஸ் கேபிள்ஸ் 13.96 சதவீதம் வரை 'மளமள'வென ஏற்றம் கண்டன.

 

உலகச்சந்தை நிலவரம்:

 

http://onelink.to/nknapp

 

கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலையால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் நேற்று 0.80 சதவீதம் வரை சரிவு காணப்பட்டது. ஆனால், லண்டனின் எப்டிஎஸ்இ 1.10 சதவீதம், ஜெர்மனியின் டிஏஎக்ஸ் 0.40 சதவீதம் ஆகிய ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஓரளவு ஏற்றத்துடன் வர்த்தகம் நடந்தது. அதேபோல் ஆசிய பங்குசந்தைகளான சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் நாடுகளிலும் சந்தை நிலவரம் நேர்மறையாக இருந்ததும், இந்தியப் பங்குச்சந்தைகளின் ஏற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

 

இதே நிலை தொடரும்பட்சத்தில் இன்று (ஜூன் 23) நிப்டி 10,500 புள்ளிகள் வரை உயரக்கூடும் என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்