16 ஆவது ஐபிஎல் சீசனின் 7 ஆவது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் ஆடினார். அதனைத் தொடர்ந்து 163 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சஹா மற்றும் கில் இருவரும் தலா 14 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் பாண்டியாவும் 5 ரன்களில் வெளியேறினார். அதன்பின் இணைந்த தமிழக வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் ஷங்கர் ஜோடி குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுப்பாக ஆடிய விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழக்க, பின் வந்த மில்லர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய போட்டியை காண ஸ்டேடியத்துக்கு காரில் வந்திறங்கிய அவர் ஊன்றுகோல் துணையுடன் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.