Skip to main content

அரசின் அறிவுரையை மீறிய ராகுல்; கை கூப்பிய பாஜக!

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

Rahul Gandhi stopped by the police in Manipur

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மைத்தேயி சமூக மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறி இருக்கும் நிலையில், அவர்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது ஏற்கனவே நலிவடைந்து இருக்கும் பழங்குடியின மக்களை மேலும் பாதிக்கும் எனும் கருத்து அப்பகுதியில் பரவலாக மேலெழுந்தது.

 

இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறி ஒரு மாதத்திற்கும் மேலாக மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூருக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியும் மணிப்பூர் கலவரம் ஓயவில்லை. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இந்திய மக்கள் அனைவருமே மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசி வரும் நிலையில், பிரதமர் மோடி மணிப்பூர்  என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க மறுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

 

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். கலவரம் நடந்து வரும் மணிப்பூருக்கு பிரதமர் கூட செல்லாமல் இருக்கும் போது ராகுல் காந்தி சென்று பார்க்க இருப்பதாகச் செய்திகள் வெளியான போதே பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், நேற்று மணிப்பூர் வந்த ராகுல் அங்கிருந்து கார் மூலம் கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திக்கச் சுராசந்திபூருக்குச் செல்ல முயன்றார். ஆனால் காரில் சென்றால் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறி போலீசார் ராகுலிடம் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் காரில் மூலம் சுராசாந்திப்பூருக்கு புறப்பட்டார். அப்போது பிஷ்ணுப்பூரில் வைத்து ராகுலின் கார் கான்வாயை போலீசார் தடுத்து நிறுத்தினார். அவரை மேற்கொண்டு செல்ல அனுமதிக்காத போலீஸ் ராகுலின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து நிறுத்தினர்.

 

மேலும் அவரை திரும்பிச் செல்லுமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர். சுமார் 1 மணி நேரமாக காரில் ராகுல் காத்திருந்ததை அறிந்த அந்த பகுதி பெண்கள் ராகுல் செல்ல அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காரில் இருந்து இறங்கிய ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மத்தியில் பேசிவிட்டு மீண்டும் இம்பால் திரும்பினார். அங்கு மணிப்பூர் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டர் மூலம் சுராசந்திபூருக்கு சென்று முகாம்களில் உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இரட்டை இயந்திர பேரழிவு அரசுகள் எதேச்சதிகார முறைகளைப் பயன்படுத்தி ராகுல் காந்தியின் இரக்க உணர்வை தடுக்கின்றன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த நடவடிக்கை அனைத்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விதிமுறைகளையும் சிதைக்கிறது” என்றார். இதற்கு கடும் கண்டனங்களை பாஜக அரசு தெரிவித்துள்ளது. 

 

பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மணிப்பூர் மாநில பொறுப்பாளருமான சம்பித் பத்ரா, “மணிப்பூரில் நிலவும் பதற்றத்தால் ராகுல் காந்தியை ஹெலிகாப்டர் மூலம் சுராசந்திபூருக்கு செல்ல உள்ளூர் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால் அதனை மறுத்துவிட்டு சாலை மார்க்கமாக மணிப்பூருக்குச் சென்றார். அவர் பிடிவாதத்துடன் சென்றது வருத்தமளிக்கிறது. அங்கு பதற்றமான சூழல் நிலவும் போது பிடிவாதத்துடன் சென்ற ராகுலின் நடத்தை மிகவும் பொறுப்பற்றது. ராகுலும் பொறுப்பும் ஒருபோதும் ஒன்றாக இல்லை என்று அதனை நிரூபித்துக் காட்டியுள்ளார். ராகுல் பொறுப்புடன் மணிப்பூர் நிர்வாகத்தின் செயல்களுக்கு செவி சாய்த்திருக்க வேண்டும். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன் சிறு அரசியல் ஆதாயங்களுக்காக போராட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்