உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும், நேற்று (12.10.2021) உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவுடன் சேர்த்து இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் சரணடைய விரும்புவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி வதேரா, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆசாத் மற்றும் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் நாங்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்தோம். பதவியில் உள்ள நீதிபதிகளால் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய இணையமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இரண்டு கோரிக்கைளை முன்வைத்தோம். அப்போதுதான் நீதி கிடைக்கும்" என தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையான மத்திய உள்துறை இணையமைச்சர் பதவியில் இருக்கும்போது, நியாயமான விசாரணை சாத்தியமில்லை என்பதால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என நாங்கள் குடியரசுத் தலைவரிடம் கூறினோம். அதேபோல பணியிலுள்ள இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாங்கள் கோரினோம்" என்றார்.
அவரைத்தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "இந்த விவகாரம் (காங்கிரஸ் கோரிக்கை) குறித்து மத்திய அரசுடன் இன்றே விவாதிப்பதாக குடியரசுத் தலைவர் எங்களுக்கு உறுதியளித்தார்" என்றார்.