Skip to main content

பிரதமர் மோடியின் தமிழர் அரசியல்; ஒடிசாவில் கைகொடுத்ததா? 

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Prime Minister Modi's politics in Odisha?

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04-06-24) எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 233 இடங்களிலும், மற்ற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இதில், ஒடிசா மாநிலத்தில் 147 சட்டமன்றத் தொகுதியும், 21 மக்களவைத் தொகுதியில் உள்ளது. ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த கட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் முக்கிய பொறுப்பில் வகித்து வருகிறார். இந்த நிலையில், இந்த மாநிலத்தில் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டமாக மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது.

அதன்படி, இங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசப்பட்ட பேச்சுகள் அனைத்தும் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது. அந்த வகையில், கடந்த மே 20ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘பகவான் ஜகன்னாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ரத்ன பண்டரின் சாவி காணாமல் போனது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை, சாவிகள் தமிழகத்திற்குச் சென்று விட்டதால், ஆறு ஆண்டுகளாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது’ என்று கூறி வி.கே.பாண்டியனை மறைமுகமாகத் தாக்கி பேசினார். இது பெரும் விவாத பொருளானது.  

Prime Minister Modi's politics in Odisha?

இதனையடுத்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நலத்தையும், அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனைத் தொடர்ந்து பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. அந்த வகையில், பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆளலாமா?’ என்றும் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக வி.கே.பாண்டியனை நியமிக்க பார்க்கிறார் எனக் கூறி கடுமையாக விமர்சனம் செய்தார். அதே போல், ஒடிசா மாநிலம். பரிபாடா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசிய போது, “ நீண்ட நாட்களாக நவீன் பட்நாயக்குடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது உடல்நிலை மோசமடைந்ததற்கு பின்னணியில் சதி இருக்கலாம் என நம்புகின்றனர். ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்கும்” என்று கூறினார். இது பெரும் சர்ச்சையானது. 

இப்படி, ஒடிசா முதல்வரின் உடல்நலத்தையும், தமிழரான வி.கே.பாண்டியனையும் பா.ஜ.க தொடர்ந்து விமர்சனம் செய்து வாக்கு அரசியல் செய்து வந்தது. பிரதமர் மோடியும், பா.ஜ.கவும் கடைபிடித்த தமிழர் அரசியல் இந்தத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கைக்கொடுத்தது என்றே கூறலாம். ஏனென்றால், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க கூட்டணி 19 இடங்களிலும், இந்தியா கூட்டணி 1 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பிஜூ ஜனதா தளம் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. அதே போல், சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.க கூட்டணி 78 இடங்களில் முன்னிலை வகித்து பெரும்பான்மைக்குத் தேவையான 74 இடங்களை விட கூடுதல் இடம்பெற்றிருக்கிறது. பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், அந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்