Deputy Chief Minister Udhayanidhi Stalin's comment on the viral video

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனப் பேசியிருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதயநிதி ஸ்டாலினின் மீது வழக்குகள் தொடரப்பட்டது. மேலும் அவரது உருவப்படங்கள் எரிப்பு, அவரது தலைக்கு விலை என பல விதமான நிகழ்வுகள் நடந்தெரியது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உதயநிதியின் புகைப்படத்தை படிக்கட்டில் பதித்து அதனைக் காலால் மிதித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisment

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் பவன் கல்யாண், “சனாதன தர்மம் என்பது ஒரு வைரஸ் என சொல்கிறார்கள். நிறைய பேர் இப்படி சொல்லி இருக்காங்க. நீங்க முதல் நபர் அல்ல நீங்கள் கடைசி நபரும் அல்ல. சனாதன தர்மம் ஒரு வைரஸ் அதை நான் நாசம் செய்யப் போகிறேன் என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள மாதிரி ஆளுங்க வந்து இருக்காங்க போயிருக்காங்க. சனாதனம் தர்மத்திற்கு எதுவுமே ஆகாது. நான் சொல்கிறேன். கடவுளோட பிளஸ்ஸிங் வாங்கிவிட்டுச் சொல்கிறேன் உங்களால சனாதனத்தை எதுவுமே பண்ண முடியாது'' என உதயநிதியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஆதரவாளரும், பவன் கல்யாண் ஆதரவாளரும் சமூக வலைதளகளில் மாறி மாறி மோதிக்கொண்டனர். அப்போது பவன் கல்யாணின் ஆதரவாளர்கள் மத்திய பிரதேசத்தில் உதயநிதியின் புகைப்படத்தை படிக்கட்டில் பதித்து அதனை காலால் மிதுத்து எதிர்ப்பு தெரிவித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கட்சித் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கட்சித்தலைவர் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.