குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. திரௌபதி முர்மு மீது பெரிய மரியாதை இருந்தாலும், யஷ்வந்த் சின்ஹாவுக்கு தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 92 சட்டமன்ற உறுப்பினர்களும், டெல்லியில் 62 சட்டமன்ற உறுப்பினர்களும், கோவாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மொத்த வாக்கு மதிப்பு 21,308 ஆக உள்ளது.