பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்திய 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டி வரை சென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதிய உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற செஸ் டை பிரேக்கர் சுற்றில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வீழ்ந்த நிலையில், இரண்டாம் சுற்று டிராவில் முடிந்தது. இதனால் நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவையும், அவரது பெற்றோரையும் பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரக்ஞானந்தா தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “பிரதமரை சந்தித்தது மிகவும் பெருமைக்குரிய தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.