பிரதமர் நரேந்திர மோடி, இன்று (15.10.2021) 7 பாதுகாப்புத்துறை நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ஆர்மர்ட் வெஹிகிள்ஸ், நிகம் லிமிட்டெட், அட்வான்ஸ் வெப்பன்ஸ் - எகியுப்மன்ட் இந்தியா, ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ், யந்த்ரா இந்தியா, இந்தியா ஆப்டேல் லிமிடெட் நிறுவனம், கிளைடர் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இன்று பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய எதிர்காலத்தை உருவாக்க இந்தியா புதிய தீர்மானங்களை எடுத்துவருகிறது. 41 ஆயுத தொழிற்சாலைகளை சீரமைக்கும் முடிவும் இந்த ஏழு நிறுவனங்களின் தொடக்கமும் இந்த தீர்மானமான பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்த முடிவு கடந்த 15 - 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது " என தெரிவித்தார்.
மேலும் அவர், "உலகப் போரின்போது, இந்தியாவின் ஆயுத தொழிற்சாலைகளின் வலிமையை உலகமே கண்டது. நம்மிடம் சிறந்த வளங்கள் மற்றும் உலகத் தரத்திலான திறன் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின், இந்த தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் தேவை ஏற்பட்டது. ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை" என்றார்.
மேலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைப் பாதுகாப்புத்துறையின் தீர்மானமான பயணத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, "உங்கள் ஆராய்ச்சியைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த நிறுவனங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்புகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் பயன்படும் என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்" எனக் கூறினார்.