Skip to main content

பேருந்து விபத்தில் யாருமே சாகவில்லை... அதிர்ச்சி தந்த அமைச்சர்!

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

பீகாரில் நேற்று நடந்த பேருந்து விபத்தில் ஒருவர் கூட சாகவில்லை என அம்மாநில அமைச்சர் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ளது பெல்வா கிராமம். இந்த கிராமத்தில் நேற்று மதியம் 3 மணியளவில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதுவதைத் தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை திருப்பிய நிலையில், அது பள்ளத்திற்குள் விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

 

 

ஆனால், 27 பேர் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல்கள் பொய் என்றும், இந்த விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் அம்மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறை அமைச்சர் தினேஷ் சந்திர யாதவ் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் பொய்யானவை. 27 பேர் உயிரிழந்ததாக நான் சொன்னது உள்ளூர் தகவல்களை வைத்துதானே தவிர, இறுதி அறிக்கை வந்தபிறகுதான் உயிரிழப்புகள் இல்லை என்று சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 

 

 

 

மேலும், ‘13 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். எட்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பேரின் உடல்கள் கிடைக்கவில்லை என்பதால், அவர்களே அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கலாம்’ என சாதாரணமாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

இதில் கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்படும் என பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்திருந்ததுதான்.

சார்ந்த செய்திகள்