Skip to main content

டைம்ஸ்-ன் 2021ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் மோடி, மம்தா!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

MODI - MAMATA

 

டைம்ஸ் பத்திரிகை வருடந்தோறும் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தலிபான் அமைப்பின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

 

இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டைம்ஸ் பத்திரிகை, பிரதமர் மோடியை சுதந்திர இந்தியாவின் மூன்றாவது முக்கிய தலைவராக குறிப்பிட்டுள்ளது. நேரு மற்றும் இந்திரா காந்தியை சுதந்திர இந்தியாவின் முதலிரண்டு முக்கியத் தலைவர்களாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அதேநேரத்தில், மோடி நாட்டை மதச்சார்பின்மையிலிருந்து, இந்து தேசியவாதத்தை நோக்கித் தள்ளுவதாகவும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை மோடி பறிப்பதாகவும், பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பதாகவும், அவர்களை மிரட்டுவதாகவும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

 

அதேபோல், இந்திய அரசியலின் உக்கிரமான முகமாக மம்தா மாறியுள்ளார் எனவும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. மேலும், "மம்தா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தவில்லை, கட்சியே அவர்தான்" என மம்தா பற்றி கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ள டைம்ஸ் பத்திரிகை, மம்தாவின் போராட்ட குணமும், ஆணாதிக்க கலாச்சாரத்தில் தனது வாழ்வை தானே வடிவமைத்துக்கொண்டதும் அவரை தனித்துவமாக்குகிறது எனவும் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் மோடியை எதிர்கொள்வதற்கு ஏதேனும் கூட்டணி ஒன்றிணைந்தால், அதில் மம்தா முக்கிய பங்கு வகிப்பது உறுதி எனவும் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்