கர்நாடகாவில் 8 ஆம் வகுப்பு படித்த ஜிடி.தேவகௌடா உயர்கல்வித் துறை அமைச்சரானது குறித்து முதலமைச்சர் குமாரசாமியிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கடந்த 23ஆம் தேதி பதவியேற்றார். அன்றே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஷ்வர் துணை முதலமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து இரு கட்சிகளிடையே அமைச்சரவை அமைப்பதில் பெரும் இழுபறி நடந்தது.
இதையடுத்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சரவை பிரிப்பது சுமூகமாக முடிந்தது. இதன்பின், ஜூன் 6ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 25 பேர் அமைச்சர் பதவியேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர் அமைச்சர்களாகினர். சித்தராமைய்யாவை தோற்கடித்த ஜி.டி. தேவே கவுடாவும் அமைச்சராகி உள்ளார்.
இந்நிலையில், 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஜி.டி.தேவ கௌடாவிற்கு உயர்கல்வி அமைச்சர் பதவி வழங்கியது குறித்து முதலமைச்சர் குமாரசாமியிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, நான் என்ன படித்திருக்கிறேன்? ஆனால், முதலமைச்சராக இருக்கிறேன். அவர் உயர்கல்வி அமைச்சர் ஆக இருப்பதனால் என்ன? அவருக்கு நிதித்துறை கொடுக்க வேண்டுமா? குறிப்பிட்ட சில துறைகளுக்கு போட்டி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அது கட்சி எடுக்கும் முடிவு தான் என்று கூறினார்.