மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான ஹேராதாஸ் என்பவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்துள்ளனர். மேலும் மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மணிப்பூர் கலவரத்தில் ஈடுபட்ட 657 பேரை இதுவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக 129 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. இரு அவைகளிலும் உடனடியாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில் மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து இன்று காலை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.