Skip to main content

“48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படும்” - ஜெய்ராம் ரமேஷ் தகவல்

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
 Jairam Ramesh informs PM candidate will be selected in 48 hours

ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (30-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல்வேறு கொள்கைகளைக் கொண்டிருக்கும் எதிர்கட்சிகள், ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இரண்டு முறை பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க சார்பில் களமிறங்குகிறார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இதுவரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணிக்கு இடங்கள் கிடைக்கும். இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டணி சேரலாம். அவர்களை இந்தியா கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைமை வகிக்கும், கார்கே, ராகுல் காந்தி , சோனியா காந்தி, ஆகியோர் முடிவு செய்வார்கள். 

பழிவாங்கும் அரசியலும் இல்லை. வெற்றியில் பெரிய மனதுடன் இருக்கப் போகிறோம் என்று நினைக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குச் சென்று இரண்டு நாட்கள் தியானத்தில் இருக்கிறார். செப்டம்பர் 7, 2022 அன்று ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவைத் தொடங்கிய அதே விவேகானந்தர் நினைவிடத்தில் இருந்துதான் மோடி ஓய்வு பெற்ற பிறகு என்னவாக இருக்கப் போகிறார் என்று தியானிக்கப் போகிறார் என்று நான் நம்புகிறேன். 

2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஒரு தீர்மானமான ஆணையைப் பெறும். அதன் பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்க 48 மணிநேரம் கூட ஆகலாம். நான் எண்ணிக்கையில் இறங்க விரும்பவில்லை. ஆனால், இந்திய கூட்டணி தெளிவான மற்றும் தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறுவோம். 273 என்பது தெளிவான பெரும்பான்மை. ​​272 இடங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்