Skip to main content

சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கடி...

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ .1,172 கோடியை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க தொழிலில் அவர்களுக்கு சாதகமாக மாநில அரசிடமிருந்து உதவி பெற்று தந்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன்மூலம் கணக்கில் காட்டப்படாமல் கோடிக்கணக்கில் அவர் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டிய சிபிஐ, 2012 மே மாதம் அவரை கைது செய்து 16 மாதங்கள் சிறையில் அடைத்தது.

 

jaganmohan reddy disappropriate asset case

 

 

16 மாதங்களுக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  அவர் மீதான இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 11 குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஜெகனும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் முதல்வராக பதவியேற்ற பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெகன்மோகன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கனவே ஜகன்மோகனுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து 10 முறை விலக்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,  குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான். எனவே, ஜெகன்மோகன் வரும் 10-ம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் இந்த கெடுபிடியான உத்தரவு ஜெகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்