Skip to main content

உயிர்பயம்; 3 வருடங்களாக இருட்டில் வாழ்ந்த குடும்பம் - திடுக்கிடும் பின்னணி!

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

family lived inside for three years due to the fear of Corona

 

‘வெளில வந்தா நாங்க இறந்து விடுவோம்’ என்று பயந்து கொண்டு தாயும் மகளும் 3 ஆண்டுகளாக  வீட்டுக்குள் முடங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றால் உலகின் பல்வேறு நாடுகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது. பொதுமக்களும் தங்களது உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த ஒரு வினோத சம்பவம் குறித்த காணொலி காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதிக்கு அருகே உள்ளது குய்யேரு கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சூரியபாபு. இவரது மனைவி கே.மணி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பயம் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் என்பது பில்லி சூனியம் போன்றது. அதை வைத்து தங்களை கொலை செய்துவிடுவார்கள் என்ற மூட நம்பிக்கையில் தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கதவைப் பூட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளனர். 

 

மேலும், ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மட்டும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே செல்வார்களாம். மற்றபடி, எந்த ஒரு விஷயத்துக்காகவும் அவர்கள் வெளியே வராமல் இருந்துள்ளனர். மணியின் கணவர் சூரியபாபு மட்டும் வெளியே சென்று உணவுப் பொருட்களை வாங்கி வந்து தன்னுடைய குடும்பத்திற்கு ஜன்னல் வழியாகக் கொடுத்து வந்துள்ளார்.

 

இதையடுத்து, மணி மற்றும் அவரது மகள்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. ஒருகட்டத்தில், சூரியபாபுவையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மேலும், இவர்களின் மோசமான நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த சூரியபாபு, உள்ளூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் உதவியை நாடினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸாரும் சுகாதாரத்துறை ஊழியர்களும் சூரியபாபுவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

 

அப்போது தாயும் மகளும் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாகக் கூறி கதவைத் திறக்க மறுப்பு தெரிவித்தனர். பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். கொரோனாவை பில்லி சூனியம் என நினைத்துக்கொண்டு ஒரு குடும்பமே வீட்டுக்குள் முடங்கிய சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்