Skip to main content

மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Election Commission Order to take action against Union Minister 

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதே சமயம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது. சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மத்திய இணை அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.

Election Commission Order to take action against Union Minister 

இந்நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களைத் தொடர்புப்படுத்திப் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா மீது தி.மு.க. அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க, கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் இந்த பேச்சுக்கு மதுரையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.