நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 6 ஆம் தேதி சென்னை வந்திருந்தனர். அதன்படி தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போலவே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு முழுவதும் 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
அதில், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2.63 கோடி உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள் ஆவர். 17 வயது நிறைவடைந்த உடனேயே பதிவு செய்தவர்கள் 10.64 லட்சம் பேர் ஆவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.