Skip to main content

கரோனாவின் கண்ணில்படாத ஒரேயொரு கேரள கிராமம்... காரணம் ஏன் தெரியுமா? 

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

corona

 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை  தீவிரமடைந்து இருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. பெருவெள்ளம், நிலச்சரிவு, எபோலா வைரஸ் இப்படி ஒவ்வொரு இடர்பாடுகளின் போதும் சிக்கித்  தவிக்கும் கேரளாவையும் விட்டுவைக்கவில்லை கரோனா.  அங்கு தினசரி கரோனா தொற்று பாதிப்பு என்பது 40 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் கேரளாவில் ஒரு மலைக்கிராமம் மட்டும் முற்றிலும் கரோனா இல்லாத கிராமமாக உள்ளது.

 

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ளது பழங்குடியின கிராமமான இடமலக்குடி ஊராட்சி. முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 3,500க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு ஒருவருக்கு கூட இதுவரை ஒரு  கரோனா பாதிப்பு கூட ஏற்படவில்லை. சுய ஊரடங்கு, வெளி ஆட்கள் கிராமத்திற்கு உள்ளே வர தடை போன்ற நடைமுறைகளாலும், அதேபோல்  கிராமத்தில் விளைந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளாலும் முதல் அலை  கரோனா தொடங்கி தற்போது வரை ஒரு தொற்று கூட அங்கு பதிவாகவில்லை.

 

CORONA

 

கடந்த ஆண்டு இதே சமயத்தில் கரோனா நோய் தொற்று குறித்து கேள்விப்பட்டதுமே கிராம மக்களாகவே தனி ஊரடங்கு அறிவித்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். மலைவாழ் மக்களின் மூப்பன் என்று அழைக்கப்படும் குடில்களில் தலைவர்கள் முழு ஊரடங்கு உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கிராமத்திற்கான போக்குவரத்து என்பது  இயற்கையாகவே  துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் இயற்கையாகவே கிராமம் தனித்துப் போய் விட்டது. அதேபோல் இந்த கிராமத்தில் இருந்து  யாரேனும் வெளியே சென்றால் கிராமத்திற்கு திரும்பும் போது கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவால் கரோனா இல்லாத கிராமமாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்