இந்தியாவில் அதிகரித்து வரும் வகுப்புவாத பதற்றங்களுக்கு தீர்வு காணுமாறு 17 முன்னாள் அரசு ஊழியர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசின் திட்டக் குழுவின் முன்னாள் செயலாளர் என்.சி.சக்சேனா, டெல்லி முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இங்கிலாந்துக்கான முன்னாள் இந்திய தூதர் ஷிவ் முகர்ஜி, முன்னாள் ராணுவ துணைத் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா உள்ளிட்ட 17 முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் எழுதிய அந்த கடிதத்தில், ‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளை வளர்ப்பதில் சில மாநிலங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அரசே எழுந்து நிற்கும் சூழல் இதற்கு முன்பு இருந்தது இல்லை. பிரிவினையின் கோரமான நினைவுகள், அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் அதன் பின் நடந்த சோகமான கலவரங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. பிரிவினைக்குப் பிறகும் கூட, நம் நாடு அவ்வப்போது பயங்கரமான வகுப்புவாதக் கலவரங்களால் உலுக்கி வருவதையும் நாம் அறிவோம். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் மூலம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் அவற்றின் நிர்வாக இயந்திரங்களின் பாகுபாடான சூழலை தெளிவாகக் காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் முன்பு இருந்தது இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவில் இந்து-முஸ்லிம் உறவுகள் மோசமடைந்து வருகிறதி. 2014 இல் மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த போக்கு மோசமடைந்துள்ளது. நாட்டின் வரலாற்றில் வகுப்புவாத கலவரம் ஒரு தொடர் பிரச்சினையாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் குழப்பமான மாற்றத்தை கண்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை பொது மக்கள் அடித்துக்கொலை செய்தல், இஸ்லாமிய வெறுப்பு பேச்சு மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் உத்தரவின் பேரில் இஸ்லாமியர்கள் வீடுகளை இடிப்பது போன்ற தொடர் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. முஸ்லீம்களுக்கு சொந்தமான வணிகங்கள் மீதான தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடவை ஏற்படுத்தும்.
வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சட்டங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், சில நீதிமன்றங்கள் சில கோரிக்கைகளை அனுமதிப்பதால் தேவையற்ற பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அனைத்து மாநில அரசும், அரசியலமைப்பை மதித்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மதச்சார்பற்ற மற்றும் பன்முக கலாச்சாரத்தை உறுதிப்படுத்த அனைத்து மதங்களின் மாநாட்டை உங்கள் தலைமையில் நடத்தப்பட வேண்டும். இத்தகைய இடையூறுகளை எதிர்கொண்டு சமூகம் முன்னேற முடியாது. மேலும், வளர்ந்த பாரதம் பற்றிய உங்கள் கனவு நனவாகாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.