Skip to main content

"ஹாக்கி அணியில் அதிக பட்டியலினத்தவர்கள் இருந்ததால் தோல்வி" - வீராங்கனை குடும்பத்தை அவமதித்த இளைஞர்கள்!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

vantana katariya

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற முக்கியப் பங்காற்றியவர் வந்தனா கட்டாரியா. இதன்பிறகு, ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது மகளிர் ஹாக்கி அணி. இருப்பினும் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்து வெண்கலத்திற்காக விளையாடவுள்ளது.

 

இந்தநிலையில், இந்திய மகளிர் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தவுடன், வந்தனா கட்டாரியாவின் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதி இளைஞர்கள் இருவர், வந்தனா கட்டாரியா குடும்பத்தினர் மீது சாதிய வன்மத்தைக் கக்கியுள்ளனர். வந்தனாவின் சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

இந்திய மகளிர் அணி தோல்வியடைந்ததும், வந்தனா வீட்டின் முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, வந்தனாவின் குடும்பத்தினரை சாதி ரீதியாக இழிவுபடுத்திய இரண்டு பிற சாதி இளைஞர்கள், பட்டியலினத்தவர்கள் அதிகம் இருந்ததாலேயே அணி தோல்வியடைந்ததாகவும், அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் பட்டியலினத்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

 

இதுதொடர்பாக வந்தனாவின் சகோதரர் போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் "போட்டி முடிந்ததும் பெரிய அளவிலான சத்தங்கள் கேட்டது. எங்களது வீட்டிற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு உயர்சாதி இளைஞர்கள் வீட்டிற்கு முன் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் சாதி ரீதியாக அவதூறு செய்தனர். எங்களது குடும்பத்தை அவமதித்தனர். மேலும், அதிக பட்டியலினத்தவர்கள் அணியில் இருந்ததால்தான் அணி தோற்றது எனவும், ஹாக்கியில் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் பட்டியலினத்தவர்களை வெளியிலேயே வைக்க வேண்டும் எனவும் கூறினர்" என தெரிவித்துள்ளார்.

 

இந்தப் புகாரின் பேரில் போலீசார் அவதூறு செய்த இருவரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இந்தப் புகாரின்மீது விசாரணை நடைபெற்றுகொண்டிருப்பதாகவும், அதன் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்