புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் வெற்றி பெற்றார். அப்போது, அவர் தாக்கல் செய்த ஆவணங்களில் அவரது சொத்தை மறைத்து ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் செல்வ.முத்துராயன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மீது ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கு மீதான குற்றப்பத்திரிகையை அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார் இன்று (22/03/2021) தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 117 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 15 சாட்சிகள், 16 ஆவணங்கள், 13 வாக்குமூலங்கள் உள்ளன.
கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜான்குமார், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. வேட்பாளராக மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.