Skip to main content

“தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ராகுல்காந்தி என்ன சொல்வார் தெரியுமா?” - அமித்ஷா

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
 Amit Shah crictized what Rahul Gandhi will say after losing the election

நாடாளுமன்றத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் ஆறு கட்ட வாக்குப்பதிவு பல்வேறு இடங்களில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (01-06-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதனால், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின் போது மின் விநியோகத்தில் பிரச்சனை இருந்தது. மின் விநியோகம் செய்வதில் சமாஜ்வாதி அரசாங்கம் பாரபட்சம் காட்டியது. மூன்று-நான்கு மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருந்தது. ரம்ஜான் காலத்தில் தடையின்றி விநியோகம் இருந்தது, ஆனால், ஜன்மாஷ்டமி அன்று மின்சாரம் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நமது முதல்வர் யோகி ஆதித்யநாத் 18 மணி நேர மின்சாரத்தை உறுதி செய்தார். 

ராமர் கோயில் கட்டியவர்களுக்கும், ராமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் இடையே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதியம் இரண்டு இளவரசர்களும் (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்) இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் நாங்கள் தேர்தலில் தோற்றோம் என்று கூறுவார்கள். மக்களவைத் தேர்தலின் முதல் 5 கட்ட வாக்குப்பதிவில் பா.ஜ.க 300 இடங்களைத் தாண்டிவிட்டது. ராகுல்காந்திக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது, மற்ற இளவரசரான அகிலேஷ் யாதவ் நான்கு இடங்களைப் பெறுவார். 

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமர்கள் வருவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது பொது அங்காடி அல்ல, 130 கோடி மக்கள் வாழும் நாடு. அப்படிப்பட்ட பிரதமர் வேலை செய்ய முடியுமா?. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். நாங்கள் அதைத் திரும்பப் பெறுவோம். அகிலேஷ் யாதவ் ஆட்சியில்தான் சஹாரா சிட்பண்ட் ஊழல் நடந்தது. மோடிதான், மோசடியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்ப வழங்கும் பணியைத் தொடங்கினார்” என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்