Skip to main content

ஆன்லைன் மோசடி; லட்சக்கணக்கில் இழந்த பணம் - 4  நாட்களில் 27 பேர் ஏமாற்றம் 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

72 lakhs have been cheated from 27 people in online fraud in Puducherry

 

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருடைய பேஸ்புக் கணக்கிற்கு சிரியா நாட்டிலிருந்து ஒரு பெண் பேசுவது போன்ற அழைப்பு வந்துள்ளது. அவரும் அந்த அழைப்பை ஏற்று அவரிடம் பேஸ்புக் மெசேன்ஜ்ர் மூலமாகப் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து சிரியாவிற்கு வந்து வேலை செய்வதாகவும், இன்னும் 2 மாதங்களில் பணி ஓய்வு பெற இருப்பதாகவும், தன்னுடைய சேமிப்பு பணமான 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும், அதில் ஒரு பகுதி பணத்தை இப்போது உங்களுக்கு பார்சல் வழியாக அனுப்புகிறேன் என்று கூறி பார்சல் அனுப்பியுள்ளார்.

 

அந்த பார்சல் இந்தியா வந்த பிறகு இந்திய ரிசர்வ் வங்கி, கொரியர் அலுவலகம், இந்திய தூதரகம், கஸ்டம்ஸ் போன்ற இடங்களில் இருந்து எல்லாம் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றது அதற்காக வரி கட்ட வேண்டும் என்று சொல்லி அவரிடமிருந்து 13 தவணைகளில் 43 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை ஏழு வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தக் கூறியுள்ளனர். அவரும் அவ்வாறே செலுத்திய பிறகு கடந்த 2 மாதங்களாக அந்த சிரியா பெண்ணிடமிருந்து எந்த தகவலும் வராத காரணத்தினால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

 

இதேபோல் புதுவையைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுக்கிறோம் என்று டெலிகிராம் மற்றும் பேஸ்புக் மூலமாக புகழ்பெற்ற கம்பெனியிலிருந்து எச்.ஆர் மேனேஜர் பேசுவது போல் பேசியதை நம்பி 4,90,000 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் சொன்ன பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்திய பிறகு அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏமாற்றத்தை உணர்ந்து புகார் கொடுத்துள்ளார். இதேபோல் கடந்த 4 நாட்களில் மட்டும் புதுச்சேரியைச் சேர்ந்த பலரும் இணைய வழி மூலமாக சுமார் 75 லட்சம் வரை இழந்துள்ளனர்.

 

இதுபற்றி சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், “பெரும்பாலான மக்கள் இணைய வழி மோசடியில் சிக்கி பணத்தை இழப்பதற்கு காரணம் பேராசை தான். ஒரே நாளில் 10%, 20% பணத்தை  லாபமாக கொடுக்கிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் கூறுவதை நம்பி அவர்கள் சொல்லுகின்ற பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி இழக்கின்றனர். பண மோசடியில் ஈடுபடுகின்ற நபர்கள் பெரும்பாலும் அயல்நாடுகளில் இருந்து டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாகவே ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதால் முக்கிய குற்றவாளிகளைப் பிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

 

பணத்தை இழந்தவர்கள் காலதாமதமாக வந்து புகார் கொடுப்பதால் வங்கி கணக்குகளை முடக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் பணத்தை மீட்பதும் பெரும் சவாலாக உள்ளது. பல்வேறு கவர்ச்சிகரமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நம்பி நன்கு படித்தவர்கள் கூட பல லட்ச ரூபாய் பணத்தை முகம் தெரியாத நபர்களுக்கு இணைய வழி மூலம் அனுப்பி ஏமாறுகின்றனர். அதேபோல் சந்தை மதிப்பை விட பொருட்கள் விலை குறைவாக கொடுக்கிறோம் என்று வரும் போலியான விளம்பரங்களை நம்பியும் பணத்தை இழக்கின்றனர். இணைய வழியில் வருகின்ற அனைத்து விளம்பரங்கள், முதலீட்டு அழைப்புகள், வேலைவாய்ப்பு,  குறைந்த விலையில் பொருளை தருகிறோம் என்ற அனைத்துமே இணைய வழி மோசடிக்காரர்களால் சோடிக்கப்பட்டவையே. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடிக்காரர்களிடம் இழக்க வேண்டாம். செல்போனுக்கு SMS, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்றவற்றில் வருகின்ற எந்த லிங்க்கையும் உள்ளே சென்று பார்க்க வேண்டாம். வெளிநாட்டு எண்களில் இருந்து வருகின்ற எந்த அழைப்பையும் ஏற்க வேண்டாம்” என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்