Skip to main content

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - களேபரத்தை கண்டுகொள்ளாத வைகோ!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
v t2

 

பிரணாப்முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி வந்தபோது அவருக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், மதிமுகவினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கருப்புகொடி காட்டினர்.  அது சமயம் போலீசார் வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.  இந்த வழக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு இன்று தூத்துக்குடி ஜே.எம். 2-வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   அதில், ஆஜராகும் பொருட்டு இன்று மதியம் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வைகோ வந்தார்.  அப்போது அவருடன் கட்சி தொண்டர்களும் பின் தொடர்ந்து வந்தனர்.   அவர்களும் நீதிமன்றத்திற்குள் நுழைய முற்பட்டனர்.அதை சில வழக்கறிஞர்கள் கண்டித்துள்ளனர்.   அது சமயம் அங்கு நின்றிருந்த ஒரு சில வழக்கறிஞர்கள்,  வைகோ ஸ்டெர்லைட்டில் ஆரம்பத்தில் அவர்களுடன் இணக்கமாக இருந்ததை சுட்டிக்காட்டியும், தற்போது அவர் மீது எழுந்த குற்றச்சாட்டையும் பேசினர்.  இது தொண்டர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

vt5

 

 வைகோ ஆஜராகிவிட்டு வெளியே வரும்போது,  வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு இருந்த அதே சில வழக்கறிஞர்கள் மீண்டும் கோஷம் எழுப்பி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனைக் கண்டு கோபம் கொண்ட ம.தி.மு.க.வினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு  குடிபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ், வெற்றி  மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீட்டு தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து வழக்கறிஞர்களை காப்பாற்றினர். இதனால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

vt5

 

 ‘எங்கள் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது அவரைப்பற்றி குடிபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் தரக்குறைவாக விமர்சித்து  பேசினர்.   அதை தாங்கமாட்டாமல், பின்னால் வந்த கட்சியினர் தாக்கிவிட்டனர் ’என்கிறார் தூத்துக்குடி மதிமுகவின் முக்கிய நிர்வாகி. 

 அதே சமயத்தில்,  ’வைகோவுடன் வந்தவர்கள் கூட்டமாக அத்துமீறி நீதிமன்றத்திற்குள் புகுந்தார்கள்.  அதை நாங்கள் கண்டித்தோம்.   அதற்காக எங்களை தாக்கினார்கள்’ என்கிறார்கள் வழக்கறிஞர்  தரப்பினர்.  

 

vt

 

இதனிடையே தாக்குதலில் காயம்பட்ட இரண்டு வழக்கறிஞர்களும் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த களேபரத்தை கண்டுகொள்ளாமல்  நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த வைகோ, செய்தியாளர்களிடம், ‘ வழக்கு விசாரணையை வரும் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.   அதுதான் நிரந்தரமான தீர்வு’ என்று கூறினார்.  


 

சார்ந்த செய்திகள்