Skip to main content

நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது கருத்துரிமையை நசுக்குக்கின்ற செயல்! -திமுக கூட்டணி கட்சியினர் கண்டனம்

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 


திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர்  ஸ்டாலின் (திமுக),  கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்), வைகோ(மதிமுக), திருமாவளவன்(விசிக), கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம்), வீரபாண்டியன்(சிபிஐ), கே.எம்.காதர்மொய்தீன்(இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), எம்.எச்.ஹவாஹிருல்லா(மனித நேய மக்கள் கட்சி), தேவராஜன்(கொமதேக), பச்சமுத்து(ஐஜேகே) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள தீர்மானம்:

 

d

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் குற்றவாளிகளைத் தப்பவிடாமல் உயர் நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ்  சி.பி.ஐ. விசாரணை நடத்தி  நீதி வழங்குக!

’’தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக உலுக்கியுள்ள பொள்ளாச்சி இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடூரத்தில் உரிய நீதியும் நியாயமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்காக அறவழிப் போராட்டங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.   ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியின் துணையுடன் நடைபெற்றுள்ள இந்தக் கொடிய குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றால்தான் முழுமையான நீதி கிடைக்கும்.

 

தங்கள் மீதான பாலியல் தாக்குதலை வெளிப்படுத்த இளம்பெண்கள் தயங்கிய சூழலில், அவர்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டிய அரசும் காவல்துறையும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, புகார் கொடுத்த பெண்ணின் பெயரையும் பிற விவரங்களையும் வெளியிட்டு சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையை வெளியிட்டிருப்பது, பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் உத்தியாகவே உள்ளது.  நியாயம் கேட்டுப் போராடும் மாணவ - மாணவியர் மீது போலீஸ் மேற்கொள்ளும் பலப்பிரயோகமும் அச்சுறுத்தலேயாகும். நீதி கேட்கும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையினர், நடந்த உண்மைகளை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுவோர்மீதும் தாக்குதலை மேற்கொள்கிறார்கள். இந்தக் கொடூரம் குறித்த காணொலியை வெளியிட்ட ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு காவல்துறையிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டிருப்பது கருத்துரிமையை நசுக்குகின்ற கண்டனத்திற்குரிய நடவடிக்கையாகும்.

 

d

 

பாலியல் வன்கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளின் பின்புலமாக ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்கள் இருப்பதால் உண்மையை மறைப்பதற்கான முயற்சிகளே அதிகளவில் நடைபெறுகின்றன. அவசரம் அவசரமாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது, சி.பி.சி.ஐ.டி விசாரணை என அறிவித்து  பின்பு, சி.பி.ஐ. விசாரணைக்கு அரசாணை வெளியிடுவது, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்துமே குற்றவாளிகளைத் தப்ப வைக்கவும், இதன் பின்னணியில் உள்ள ஆளுந்தரப்பினரைக் காப்பாற்றவுமான செயல் பாடுகளாகவே அமைந்துள்ளன.

 

d

 

தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக மாறிவிட்ட பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். சிலை கடத்தல் வழக்கு போன்றவற்றில் நீதித்துறை காட்டுகின்ற சிறப்பு கவனத்தை இந்த வழக்கிலும் காட்ட வேண்டும். எந்த வகையிலும் பாலியல் கொடூரக் குற்றவாளிகளும் அவர்களைப் பின்னணியில் இருந்து இயக்கிய அதிகாரக் கரங்களும் தப்பிவிடாதபடி - கடுமையாகத் தண்டிக்கப்படும் வகையில் நீதி கிடைக்கவேண்டும் என இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.