தமிழக ஆளுநர் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நேற்று தமிழக ஆளுநர் பத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார். அவர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை எனத் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மீண்டும் தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் உடனடியாகச் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தொடர்பான மசோதா; மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா; வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா; சென்னை பல்கலைக்கழக திருத்த மசோதா; சட்டப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா; அன்னை தெரசா பல்கலைக்கழக திருத்த மசோதா; மீன்வளம், கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா; தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா; அண்ணாமலை பல்கலைக்கழக திருத்த மசோதா; பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதா ஆகியவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது போலவே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள பத்து மசோதாக்களையும் நிறைவேற்றத் தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், நாளை நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. நாளை மீண்டும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.