Skip to main content

சொந்த ஊருக்கு புறப்பட்ட மணிப்பூர் மாநில தொழிலாளர்கள், மாணவர்கள் (படங்கள்)

Published on 10/05/2020 | Edited on 11/05/2020

 

சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் மணிப்பூர் மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இன்று அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அண்ணாநகர் பகுதியிலிருந்து சுமார் 1200 பேர் இன்று புறப்பட்டனர். 

 

சூளைமேடு பகுதியிலிருந்து 230 பேரை ஒருங்கிணைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்தில் அனுப்பி வைத்தார் மேரி. அவரிடம் பேசியபோது, "மணிப்பூரில் இருந்து சென்னை வந்து பணிபுரியும் எங்கள் மாநில மக்கள் யாரேனும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பினால், மணிப்பூர் மக்கள் ஒருங்கிணைப்புக் குழு என்கிற எங்கள் மணிப்பூர் அரசின் இணையத்தில் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.


அதன்படி நாங்கள் பதிவு செய்தோம். மேற்படி பதிவு செய்தவர்களின் விபரங்களைத் தமிழக அரசிடம் எங்கள் மாநில அரசு தகவல் கொடுத்ததால் அனைவரும் பாதுகாப்பாக இரு அரசுகளின் ஒத்துழைப்போடு எங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கிறோம். தமிழகம் முழுவதும் எங்கள் குழுவின் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து அனைவரையும் அனுப்ப ஏர்பாடு செய்கின்றனர். நான் சூளைமேடு பகுதியில் பொறுப்பேற்று அரசின் உதவியோடு செல்கிறோம்" என்றார். 
 

இதற்கிடையில் இவர்கள் செல்வதைக் கேள்விபட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் எங்களையும் அழைத்து செல்லுமாறு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களைப் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.