Skip to main content

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

dmk mla j.anbazhagan incident chennai hospital


கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார். 
 


சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் ஜெ.அன்பழகன். தி.மு.க. கட்சிப்பணிகளில் தீவிரமாகப் பணியாற்றிய ஜெ.அன்பழகன் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2001இல் தி.நகரிலும், 2011, 2016இல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் 15 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். 

கட்சிப்பணிகளைத் திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டுப் பெறுவதில் வல்லவர். மனதில் படும் கருத்துகளைத் துணிச்சலாகக் கட்சித் தலைமையிடம் தெரிவிக்கும் குணம் கொண்டவர் ஜெ.அன்பழகன். தி.மு.க. கட்சிப்பணிகளுக்கு மத்தியில் ஜெ.அன்பழகன் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்து வந்தார். அன்பு பிக்சர் பெயரில் ஜெயம் ரவியின் 'ஆதி பகவன்', 'யாருடா மகேஷ்' படத்தையும் தயாரித்தவர். விஜய்யின் 'தலைவா' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டபோது படத்தை வெளியிடத் தயார் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று தனது 62- ஆவது பிறந்தநாளில் காலமாகியுள்ளார். மறைந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வின் இறுதிச்சடங்கு கண்ணம்மாப்பேட்டையில் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்