144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்பது கூட தெரியாமல் முதல்வர் உள்ளார் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அச்சரப்பாக்கத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு பேசியதாவது,
நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடியிடம் தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்காதது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், மக்களை சென்று சந்திக்கவில்லை என்று சொல்வது தவறான குற்றச்சாட்டு. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும் என பதிலளித்துள்ளார். 144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்பது கூட தெரியாமல் ஒரு முதல்வர் உள்ளார்.
திமுக நடத்துவது நாடகம் என்றால் அதிமுக நடத்துவது கபடநாடகம். மிசா சட்டத்தையே சந்தித்தவர்கள் தான் திமுகவினர், வழக்கை பற்றி எங்களுக்கு கவலையில்லை. மக்களுக்காக போராடி சிறைக்கு செல்வதை பற்றி திமுகவினருக்கு கவலை இல்லை.
ஆட்சியில் இருப்பவர்கள் விரைவில் எந்தெந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நாடு பார்க்கும். ஊழல் செய்து விட்டு பெங்களூரு சிறையில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.