Skip to main content

நடிகர் விவேக் காலமானார்!! (படங்கள்)

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

 

1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விவேக். கலைவாணர் என்.எஸ்.கே போல அவர் நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகளில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறியவர். நகைச்சுவை மூலம் லஞ்சம், ஊழல், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அவருக்கு 'சின்ன கலைவாணர்' என்ற அன்புப் பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதேபோல், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர். மேடைகள் தோறும் கலாமின் கருத்துகளைப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தவர் விவேக்.

 

கடந்த 2009ஆம் ஆண்டு கலையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை இதுவரை ஐந்து முறை பெற்றுள்ளார். 'உன்னருகே நானிருந்தால்', 'பார்த்திபன் கனவு', 'அந்நியன்', 'சிவாஜி' ஆகிய படங்களுக்காக விருது பெற்றுள்ளார். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது, விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, மாதவன் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, கோவை சரளா, சந்தானம், யோகிபாபு ஆகியோருடனும் நடித்துள்ளார். 'நான் தான் பாலா', 'வெள்ளைபூக்கள்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன்2' படத்திலும் விவேக் ஒப்பந்தமாகியிருந்தார். 

 

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதைப் பராமரிக்கவும் செய்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.