ஒற்றுமையின் சிலையை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்று சொன்னார்கள். உலகின் மிக உயர்ந்த சிலை என்ற பெருமையுடன் நர்மதை அணையில் கட்டப்பட்ட சர்தார் படேல் சிலையின் பெருமைகள் இப்போது முழுமையாக வெளியாகி இருக்கின்றன.
முதலில் படேல் என்ற காங்கிரஸ் தலைவர் மீது பாஜக காட்டும் பாசத்துக்கு காரணம் என்ன என்று கேட்கும் கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.
குஜராத்தில் படேல் வகுப்பினர் 1கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்குகளைக் குறிவைத்தே இந்த சிலை ஏற்பாடு என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், ஹர்திக் படேல் தலைமையில் படேல் வகுப்பினர் கேட்கும் இடஒதுக்கீடுக் கோரிக்கையை பாஜக அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இன்னொரு பிரிவினர், மகாத்மா காந்தியைக் கொல்ல தீட்டப்பட்ட சதித்திட்டம் குறித்து அன்றைய உள்துறை அமைச்சரான சர்தார் படேலுக்கு தெரியும் என்றும், 10 நாட்களுக்கு முன் நடந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட கோட்சே உள்ளிட்டோரின் புகைப்படங்கள் உள்பட உளவுத்துறையினரின் கையில் இருந்தது என்றும், ஆனால், காந்தியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை படேல் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். காந்தி கொல்லப்பட்ட பிறகு, அன்றைய இந்துமகா சபை, அல்லது இன்றைய ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்யும் முடிவை முதலில் படேல் ஏற்கவில்லை என்ற கருத்தும் பரவியது. இவை அனைத்தும் வரலாற்று உண்மைகள் என்பதைத் தாண்டி, படேலை பாஜக கையில் எடுப்பதற்குரிய காரணங்களை அம்பலப்படுத்துவதாகவு அமைந்தன.
இந்நிலையில்தான், உலகின் உயரமான சிலையை அமைப்பதாகக் கூறிக்கொண்டே, அவருடைய துணையுடன் உருவாக்கி மேம்படுத்தப்பட்ட பல்வேறு துறைகளின் நிர்வாகத்தை பாஜக சீர்குலைக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதேசமயம், நீண்டகாலமாக குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பை வகிக்கும் நேரத்தில் இத்தகைய சிலையை ஏன் கட்டுவதற்கு மோடி முயற்சி மேற்கொள்ளவில்லை என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி வினா எழுப்பியிருக்கிறார்.
எல்லாம் போகட்டும். உலகிலேயே உயரமான சிலையால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்ற பலரும் கேட்கிறார்கள். 2989 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தச் சிலையின் பெருமைகளை முதலில் தெரிந்துகொண்டால், இதனால் என்ன லாபம் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்…
இந்தச் சிலையை வடிவமைக்கவே 13 மாதங்கள் ஆகியிருக்கின்றன. பின்னர் இதைக் கட்டி முடிக்க 33 மாதங்கள் ஆகின. 18 ஆயிரத்து 500 டன்கள் இரும்பும், ஆயிரத்து 700 டன்கள் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சிலையை பார்வையிட நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலையை வெளியில் இருந்த பார்வையிட நபர் ஒருவருக்கு 120 ரூபாயும், சிலையின் உள்ளே 132 மீட்டர் உயரத்திற்கு ஏறிச்சென்று மார்புப்பகுதியில் உள்ள பார்வையாளர் மாடத்திலிருந்து ஏரியையும் மலைகளையும் பார்வையிட நபர் ஒருவருக்கு 350 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதாவது சராசரியாக 250 ரூபாய் கட்டணம் என்றாலும் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் வரவு வரும் என்று கூறுகிறார்கள். அதாவது மாதத்திற்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என தெரிகிறது. ஆக, குஜராத் அரசுக்கு ஏதோ ஒரு வகையில் லாபத்தைத்தான் மோடி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் துறை சார்பில் ஒரு தங்கும் விடுதியும், 250 நிழற்குடைகளும் நிரந்தரமாக அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படியானால், அதிலும் ஒருவகையில் வருமானம் கிடைக்காதானே செய்யும் எனக் கேட்கிறார்கள்.
இதற்கிடையே, படேல் சிலையை திறக்கும் நாளை தங்களுடைய துக்கநாளாக நர்மதை அணையை உயர்த்தியதால் வீடுகள் மற்றும் விளைநிலங்களை இழந்த 72 பழங்குடி இன மக்கள் துக்கநாளாக அறிவித்திருந்தனர். அவர்கள் போராட முடிவு செய்திருந்ததை ஒட்டி, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சிலையை திறப்பதற்கு பதிலாக பழங்குடி மக்கள் நலனுக்காக சில நலத்திட்டங்களை அறிவித்திருக்கலாம் என்று சட்டமன்ற உறுப்பினர் சோட்டுபாய் வசவா கூறினார். இந்தத் திட்டத்தால் நர்மதை அணையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறிய சமூகநல ஆர்வலர் ரோஹித் பிரஜாபதி முன்கூட்டியே கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டு இந்த திறப்புவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.