உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். 16,17 ஆகிய தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவருக்கு இன்று 15.11.2019 வெள்ளிக்கிழமை தினம்தான் கடைசி பணி நாள் ஆகும்.
அசாம் மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள திப்ருகர் நகரில் 18.11.1954ல் பிறந்தார் ரஞ்சன் கோகாய். இவரின் தந்தை கேசவ் சந்திரகோகாய், 1982ல் அசாம் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.
தனது தந்தையைப்போலவே சட்டம் பயின்ற ரஞ்சன் கோகாய், 1978 முதல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 2001ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010ல் பஞ்சாம் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2011ல் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2018ம் ஆண்டில் ஏப்ரல் 23ம் தேதி அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அக்டோபர் 3ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
தனது பதவிக்காலத்தில் முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் ரஞ்சன் கோகாய். கடந்த 9.11.2019ல் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பினை வழங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நில வழக்கு முடிவுக்கு வந்ததால், ரஞ்சன் கோகாய் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
ரஃபேல் விமான ஒப்பந்த வழக்கிலும், சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப்பெண்களும் வழிபட உரிமை கோரிய வழக்கிலும் ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்துள்ளார்.
இத்தனை பரபரப்பான வழக்குகளில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய் மீதே பாலியல் குற்றச்சாட்டு பாய்ந்து பெரும் பரபரப்பை கூட்டியது. நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், கோகாய் தம்மை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார் என்று குற்றம்சாட்டினார். இந்தியதலைமை நீதிபதியின் மீதே எழுந்த இந்த பாலியல் குற்றச்சாட்டு நீதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், புகாருக்கான முகாந்திரம் ஏதுமில்லை எனக்கூறி, நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக்குழு ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது.
ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண்தான் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். 2014ம் ஆண்டு மே மாதம் முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் வரை, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற இளநிலை உதவியாளராக பணியாற்றிய அந்தப்பெண் அக்டோபர் 2016 முதல் அக்டோபர் 2018 வரை இரண்டு ஆண்டுகள் கோகாயின் நீதிமன்ற அறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர்.
உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு, அந்த பெண் ஒரு பிரமாணப் பத்திரத்தை கடிதமாக அனுப்பினார். ரஞ்சன் கோகாய் வீட்டில் 2018ம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில் அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தகவல் இடம் பெற்றிருந்தது.
அந்த கடிதம் தொடர்பான செய்தி சில ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நீதிபதி ரஞ்சன் கோகாய், நான் 20 வருட காலமாக நீதித் துறையில் பணியாற்றி வருகிறேன். சுய லாபம் இல்லாத எனது சேவையில், தற்போது என் மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. இது நம்பமுடியாததாக இருக்கிறது. நீதிபதி பொறுப்பில் நான் மிகவும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. இப்படி புகாரை கூறியுள்ளதன் மூலமாக நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்லது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னால் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ரஞ்சன் கோகாய். நீதிபதி பாப்டே தலைமையிலான இந்த குழுவில் இந்திராபானர்ஜி, இந்து மல்கோத்ரா இடம்பெற்றிருந்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்த உள்விசாரணைக்குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லை என புகார் மனுவை தள்ளுபடி செய்தனர்.
ரஞ்சன் கோகாயின் ஓய்வுக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை 47வது நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட உள்ளதாகவும், எஸ்.ஏ.பாப்டே அடுத்த தலைமை நீதிபதி ஆகவேண்டும் என்று ரஞ்சன் கோகாயும் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.