உலக புகழ்பெற்ற இயக்குநரும், இயற்கை ஆர்வலருமான டேவிட் அட்டன்பரோவுக்கு இந்திராகாந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான தேர்வுக்குழு இந்திரா காந்தி அமைதி விருதுக்கு அட்டன்பரோவை தேர்வு செய்துள்ளது.
இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு கோடி ரொக்கத் தொகையும் பாராட்டு சான்றிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 1986ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை காதலன் என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட 93வயதாகும் டேவிட் அட்டன்பரோ இந்த ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
8.5.1926ல் இங்கிலாந்தில் பிறந்தவர் டேவிட் அட்டன்பரோ. மகாத்மா காந்தியின் வரலாற்றை ‘காந்தி’என்ற பெயரில் எடுத்து புகழ்பெற்ற ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பிதான் இந்த டேவிட் அட்டன்பரோ. இயற்கை ஆர்வலரும், ஆவணப்படங்களின் இயக்குநரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொகுப்பாளருமான டேவிட் அட்டன்பரோ, இங்கிலாந்து நாட்டின் விலைமதிப்பற்ற சொத்தாக கருதப்படுகிறார். கடந்த 2002ம் ஆண்டில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த 100 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் டேவிட்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக விலங்குகளின் வாழ்க்கை முறைகள், இயற்கையோடு அவற்றுக்கு இருக்கும் உறவுகளைப்பதிவு செய்து வருகிறார். காட்டில் வாழும் அபூர்வமான விலங்குகள் மட்டுமல்லாது, தெருக்களில் உலவும் விலங்குகளைப்பற்றியும் நமக்கு தெரியாத பல அரிய தகவல்களை எழுதியிருக்கிறார். விலங்குகளின் புலப்பெயர்வு, உண்ணும் உணவு வகைகள், விசித்திரமான பழக்கங்கள், தந்திரமான வேட்டை முறைகள், குழுக்களாய் அலையும் குணங்கள் போன்ற அனைத்தையும் ஆவணப்படமாக்கியிருக்கிறார்.
விலங்குகளின் அழிவுகளில் மனிதனின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. சமச்சீரான தட்ப வெட்பம், செழிப்பான நிலங்கள் என விலங்குகள் வாழ்வதற்கு தேவையானவை இருந்தும், இந்தியா போன்ற கிழக்காசிய நாடுகளில் பல இனங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. பூனை வகைகளான புலி, சிங்கம் மற்றும் அரிய வகை மைனாக்கள், வல்லூறுகள் போன்ற விலங்குகளின் கணக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் பாதியாகிவிட்டது என டேவிட் அட்டன்பரோ புள்ளிவிபரங்களோடு தெரிவித்துள்ளார்.
‘லைஃப் ஆன் எர்த்’, ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ போன்ற 100க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார் டேவிட். 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
பிபிசிக்காக டேவிட் வழங்கிய ‘லைஃப் சிரீஸ்’ எனும் தொலைக்காட்சித்தொடர்தான் வன உயிர் ஆவணப்படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்கிறது. பறவைகளின் பழக்கவழக்கங்களை ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ என்ற தொடரில் சொல்லியிருக்கிறார். மனிதர்களை கண்டாலே பறந்துபோய்விடும் பறவைகள். ஆனால், டேவிட் அட்டன்பரோவை சக பறைவை என்றே பறவை இனங்கள் நினைக்கும் அளவுக்கு அவர் பறவைகளோடு பறவயாக வாழ்ந்துள்ளார். இவர் அழைத்தால் பறவைகள் அருகே வந்து அமர்ந்துவிடுகின்றன.
விலங்குகளின் பாதுகாப்பும், இயற்கை வளங்களைக்காப்பதும் நம் வாழ்வுக்குஎந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் டேவிட் அட்டன்பரோ.