விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. இதனைத் திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்திருக்க அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் 7ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விதார்த், வாணி போஜன், சுப்புராமன் ஆகியோர் நக்கீரன் ஸ்டியோவிற்கு பேட்டி அளித்தனர். அப்போது வாணி போஜனிடம், வாரிசு நடிகர்களுக்கு பிரம்மாண்ட அறிமுகம் இல்லாத அல்லது வளர்ந்து வரும் நடிகைகளுக்கு பிரம்மாண்டம் குறைவாக இருக்கிறதே என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நிச்சயமாக அவங்களுடைய அறிமுகம் பெருசாகத்தான் இருக்கு. ஆதரவளிக்க ஒரு நான்கு பெரிய நடிகர்கள் வராங்க. அடுத்தடுத்த படங்கள் குவிகிறது.
இதைப் பொறாமையில் சொல்லவில்லை. யதார்த்தத்தில் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் என்னை மாதிரி நிறையப் பெண்களைப் பாருக்கும் போது கஷ்டமாக இருக்கும். நல்ல நடிகைகளைப் பார்க்கும் போது, இந்தப் பொண்ணுக்கு எப்போது அந்தப் பெரிய அறிமுகம் கிடைக்கும் எனத் தோணும். ஆனால் விழா சிறிய அளவில் இருந்தாலும் மக்கள் உண்மையாக இருக்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள் இல்லை. பிரபலங்களின் குடும்பத்திலிருந்து வந்ததால், அவர்களுக்கு அதிக வரவேற்பையும் அறிமுக நடிகைகளுக்கு குறைவான வரவேற்பையும் கொடுப்பதில்லை. மிகத் தெளிவாக இருக்கிறார்கள். நம்மளை ரசிப்பவர்கள் சிறியக் கூட்டமாக இருந்தாலும் அவர்கள் உண்மையாக இருக்கிறார்கள். அது போதும்” என்றார்.