Skip to main content

மீண்டும் திரையரங்கில் “சுப்ரமணியபுரம்”... மறக்க முடியாத சுவாரசியமான விஷயங்கள்!

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Subramaniapuram re release special article

 

2008 ஆம் ஆண்டு, ஜூலை 4 ஆம் நாள் 'சுப்ரமணியபுரம்' வெளியானபோது, இந்தப் படம் காலாகாலத்துக்கும் பேசப்படும் படமாக அமையப்போகிறது என்பது படம் பார்க்க வந்த பெரும்பாலானோருக்குத் தெரியாது. வெளியான காலத்துக்கு சற்றே முன்பு நிலவிய நான்கு நண்பர்கள் - ஒரு ஹீரோயின் - காமெடி - காதல் கதை என்றே பலரும் நினைத்தனர். அப்படிப்பட்ட எண்ணத்துடன் சென்று படம் பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, இன்ப அதிர்ச்சி. 80கள் காலகட்டத்தை அப்படியே கொண்டுவந்தது, கொண்டாட்டமான நட்பு, அழகான காதல், அதிர வைக்கும் துரோகம், உறைய வைக்கும் வன்முறை எனப் படம் உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்தது. அந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப் படமாகத் திகழ்ந்தது. 15 ஆண்டுகள் கடந்தும் மறக்க முடியாத அந்தப் படம் குறித்த மறக்க முடியாத, சுவாரசியமான விஷயங்கள்...

 

Subramaniapuram re release special article

 

சசிக்குமார், பாலா - அமீர் பட்டறையிலிருந்து சூடாகக் கூர் தீட்டப்பட்டு வந்திருந்தார். தமிழ் சினிமாவில் 'துரோகம்' என்ற விஷயம் சற்று குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் காதலுக்குள் துரோகம் என்பது அப்போது மிக அரிது. 80களில் நடக்கும் இப்படி ஒரு சீரியஸ் கதை என்பதை ஒரு முதல் பட இயக்குநரிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனை இத்தனை நேர்த்தியாகப் படைத்து திரையுலகத்தை திரும்பிப்பார்க்க வைத்தார் சசிக்குமார். அதன் பிறகு 'ஈசன்' மட்டுமே இயக்கிய சசிக்குமார் ஹீரோவானதில் ஒரு நல்ல இயக்குநரை நாம் மிஸ் செய்திருக்கிறோம்.

 

Subramaniapuram re release special article

 

படத்தின் பாடல்கள் அத்தனையுமே மிகப்பெரிய ஹிட். 'கண்கள் இரண்டால்' பாடல் காதல் தேசத்தின் கீதமாக, காலர் ட்யூனாக, ரிங்டோனாக எங்கும் ஒலித்தது. 'கண்கள் இரண்டால்' ஒரு பக்கமென்றால், சுப்ரமணியபுரம் மூலமாக இன்னொரு பாடலும் பெரும் புகழைப் பெற்றது. அது 'சிறு பொன்மணி அசையும்...' பாடல். ஜெய், ஸ்வாதியைப்  பின்தொடர்ந்து காதல் செய்யும் ஆரம்பக்கட்ட காட்சிகளில் ஒலிக்கும் அந்தப் பாடல் 'கல்லுக்குள் ஈரம்' என்ற 1980ஆம் வருட படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல். 'சுப்ரமணியபுரம்' படத்தில் அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் இளைஞர்கள் குதூகலித்தனர்.

 

Subramaniapuram re release special article

 

சுப்ரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சசிக்குமாரின் பள்ளி ஆசிரியர். கொடைக்கானலில் சசிக்குமார் படித்த செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் இசை ஆசிரியர் ஜேம்ஸ். அப்போதே சசிக்குமாருக்கு சினிமாவின் மேல் பெரும் ஈர்ப்பாம். பின்னாளில் தான் படம் இயக்கியபோது தன் ஆசிரியரையே இசையமைப்பாளராக்கினார். ஜேம்ஸ் வசந்தன், அதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறியப்பட்டிருந்தார். இசையில், அனைத்து பாடல்களும் ஹிட்டாகும்படியான ஒரு சிறந்த ஆல்பத்தை தன் மாணவனுக்கு உருவாக்கி அளித்திருந்தார்.

 

Subramaniapuram re release special article

 

படத்தின் கதை மதுரையில் நிகழ்வதாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் திண்டுக்கல்லில் படமாக்கப்பட்டன. பழமை மாறாத தெருக்களும், வீடுகளும் திண்டுக்கல்லில் அமைந்தன. படப்பிடிப்பு நடந்தபோது இப்படி ஒரு மிக முக்கியமான வெற்றிப்படம் தங்கள் பகுதிகளில் உருவாக்கப்படுகிறது என திண்டுக்கல் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. நடித்தவர்கள், குழுவினர் என அனைவரும் புதியவர்களாகவும், பெரிய புகழ் பெறாதவர்களுமாக இருந்தனர். கதை நடக்கும் இடமான மதுரையில் இப்படம் 'தங்கரீகல்' என்ற பழமை வாய்ந்த திரையரங்கில் வெளியானது. அதுவரை 'A' சான்றிதழ் படங்களாக வெளியிடப்பட்டு வந்த நிலையில், அந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டு சுப்ரமணியபுரம் வெளியாகி பத்து வாரங்களுக்கும் மேல் கொண்டாட்டமாக ஓடியது.

 

Subramaniapuram re release special article

 

சமுத்திரக்கனி, படத்தின் முக்கிய பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த பாத்திரம் கொல்லப்படும் காட்சியில் ரசிகர்களின் குரலால் அரங்கம் அதிர்ந்தது. அந்த வெறுப்பு, சமுத்திரக்கனியின் நடிப்புக்கான அங்கீகாரமாக அமைந்தது. சின்னத்திரையில் பிஸி இயக்குநராகத் திகழ்ந்த சமுத்திரக்கனி சினிமா முயற்சிக்காக சின்னத்திரையைத் துறந்து வாய்ப்புகள் தேடிக் காத்திருந்த காலத்தில், அவரை சசிக்குமார் அழைத்து நடிக்கவைத்தார். அதன் பின் சசிக்குமார் - சமுத்திரக்கனி கூட்டணியின் நட்பு புகழ் பெற்றது. ரஜினி படம், ராஜமௌலி படம் என இன்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே நடித்து முக்கிய நடிகராக வலம் வருகிறார் சமுத்திரக்கனி.

 

Subramaniapuram re release special article

 

'நாங்களும் செகப்பா தானடா இருக்கோம்', 'பரமா... சாவு பயத்த காட்டிட்டாய்ங்க பரமா', 'உங்க பூசாரித்தனமும் வேண்டாம் பொங்க சோறும் வேண்டாம்', 'கேக்குது கேக்குது மைக்செட் சத்தம்...', 'சுத்தபத்தமாதான இருக்க', 'பூட்டியிருந்த வீட்டுல சவுண்ட குடுத்துட்டு வர்றான்', 'நல்லாத்தானடா இருந்தோம்...' என இன்றும் ரசிக்கப்படும் யதார்த்தம் நிறைந்த அழுத்தமான வசனங்கள், மறக்க முடியாத காட்சிகள் நிறைந்திருந்தது சுப்ரமணியபுரம்.

மேக்கிங் என்று சொல்லப்படும் உருவாக்கத்திலும் மிகச் சிறப்பாக இருந்தது. 1980 காலகட்டத்தை அப்படியே உருவாக்கி பீரியட் படங்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க்காகவும் ரெஃபரன்ஸாகவும் அமைந்தது. உடை, சிகை, வீடுகள், சிறைச்சாலை, திரையரங்கு, பேருந்து என அனைத்தும் அப்படியே அந்த காலகட்டத்தை நமக்குக் காட்டின.

 

Subramaniapuram re release special article

 

அழகர் (ஜெய்), பரமன் (சசிக்குமார்), துளசி (ஸ்வாதி), கனகு (சமுத்திரக்கனி), காசி (கஞ்சா கருப்பு), சித்தன் (மோகன்), டும்கான் (மாரி), டோப்பா (விசித்திரன்) உட்பட ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. இயக்குநராக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மிகச் சிறப்பானதொரு துவக்கத்துடன் வந்தார் சசிக்குமார். தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர்களும் நடிகர்களும் சுப்ரமணியபுரத்தைப் பார்த்து, வியந்து, ரசித்துப் பாராட்டினர்.

ஜெய் நடித்திருந்த 'அழகர்' பாத்திரத்தில் நடிக்க அதற்கு முன்பு அணுகப்பட்டவர் சாந்தனு பாக்யராஜ். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக 'சக்கரக்கட்டி' அவரது முதல் படமாக அமைந்தது.

 

Subramaniapuram re release special article

 

'சுப்ரமணியபுரம்' படம் வெளியாகும் முன்பு படத்தின் ப்ரொமோஷனுக்காக 'தேநீரில் சிநேகிதம்' என்ற பாடல் வீடியோ வெளியானது. படத்திற்கும் அந்தப் பாடலுக்கும் தொடர்பே இல்லாத வகையில் மாடர்னாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் பாடலும் ரசிக்கப்பட்டது.                         

தியேட்டர்களிலும் கொண்டாடப்பட்டு, விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட இந்தப் படம் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது. அதீத வன்முறை நிறைந்திருக்கிறது, இளைஞர்களை ரௌடியிசம் பக்கம் திருப்புகிறது, பெண்கள் மீது வன்மத்தைத் தூண்டுகிறது என சில விமர்சனங்களையும் எதிர்கொண்டது. சசிக்குமாரால் சமுத்திரக்கனி கொல்லப்படும் அந்தக் காட்சி அதீத வன்முறையாக இருந்தது உண்மைதான். அதற்குத் திரையரங்குகளில் எழுந்த வரவேற்புக் குரல்கள் பலரைக் கவலைகொள்ளச் செய்தன.

 

Subramaniapuram re release special article

 

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், சுப்ரமணியபுரம் படத்தைப் பெரிதும் பாராட்டியிருந்தார். பல பேட்டிகளில், பாலா - அமீர் - சசிக்குமார் ஆகியோரின் படங்களை, தான் மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ள அனுராக், தனது 'கேங்ஸ் ஆஃப் வாசிபூர்' சிரீஸுக்கு சுப்ரமணியபுரம் ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

 

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுப்ரமணியபுரம் திரையரங்கில் மீண்டும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் ஆண்டுகள் கடந்தாலும் நல்ல படத்தை கொண்டாடுவார்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது...

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்