தமிழில் இயக்குநராக காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது தனுஷின் ராயன் மற்றும் தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.
இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்து பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமது இதயம்தான் கடவுள் என வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்த உலகத்தில் இருக்கிற ஆண்கள், பெண்கள், கல்யாணம் ஆனவங்க, ஆகாதவங்க எல்லாருக்குமே ஒரு கனவுதான். நமக்குன்னு ஒருவனோ, ஒருத்தியோ வருவாங்க, நம்மள நல்லா புரிஞ்சிக்குவாங்க, நம்மள மடியில வச்சு தாலாட்டுவாங்க, முதல் மரியாதையில சிவாஜி சாருக்கு ராதா கிடைச்ச மாதிரி. நீங்க அவரை தேடி புடிச்சுட்டாக் கூட, கடைசி வரைக்கும் அப்படி ஒருத்தர் கிடைக்கமாட்டாங்க. ஏன்னு யோசிச்சீங்கனா, மண்டைய போட்டு உடைச்சிப்பீங்க. நாம் நினைச்ச மாதிரியே இருக்காங்களே, ஆனா இது நினைச்சவங்க மாதிரியே இல்லையே, அப்படினு ஒரு நாள் விட்டிடுவீங்க. இந்த ஸ்டேட்டஸ் வருவதற்கு முன்னாடியே என்னைக்காவது ஒரு நாள் கண்ணாடியைக் கடந்து போகும் போது பாருங்க. அதுல யார் தெரியுறாங்கனு. புரியுதா அது நீங்க தான். நீங்க தான் உங்களுக்கு அமைதிய கொடுக்க முடியும். உங்கள சந்தோஷமா வச்சிக்க முடியும்.
எல்லா விதமான உறுதுணையாவும் இருக்க முடியும். வேறு யாராலையும் இருக்க முடியாது. நம்மலாம் தேடுறோம். கடவுள் எங்க, கடவுள் எங்கனு. அந்தக் கடவுள் எல்லாருக்கும் தன்னுடைய போர்ஷனா ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறாரு. அது யாருன்னா உங்களுடைய இதயம்தான். நல்லவனா நினைச்சா நல்லது, கெட்டவனா நினைச்சா கெட்டது. என் அனுபவத்துல சொல்றேன், இத விட உங்களுக்கு சிறந்த நணபரோ, கனவு காண்கிற ஒருத்தரோ, யாரும் கிடைக்க மாட்டாங்க. அதனால் தனியா சாப்ட்டு, நடந்து, பழகுங்க. தனியா இயற்கைக்கு புடிச்ச இடம் எதாச்சும் கிடைச்சதுன்னா, அங்க உக்காந்து மணிக்கணக்கா, நீங்களே உங்க இதயத்துக் கூட பேசுங்க. இதயம் திருப்பி பேசும். அதுக்கப்புறம் ஒரு மேஜிக் நடக்கும்” என்றார்.