Skip to main content

"நின்னு சண்டை செய்யணும்" - விஜய் பேச்சு குறித்து சீமான்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

seeman about vijay speech in leo success meet

 

விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். சமீப காலமாகத் தீவிரமாக அது செயல்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ஒருபேச்சு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் நேற்று மாலை அவர் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் பல்வேறு விஷயங்களைப் பேசிய விஜய், "2026ல் கப்பு முக்கியம் பிகிலு" என சொன்னார். அது தற்போது அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "அரசியல் கட்சி துவங்குகிற ஒவ்வொருவருக்கும் இருக்கிற கனவு தான் அது. அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று மட்டும் சொல்ல முடியாது. விஜய்க்கு அந்த கனவு இருக்கிறதென்றால் அதை வாழ்த்த வேண்டும். ஒருத்தருடைய முதுகுக்கு பின்னாடி நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கு. தட்டி கொடுக்கிறது தான். அதனால் தம்பியை தட்டி கொடுப்போம். அவ்வளவு தான் நாம் செய்ய முடியும். 

 

எப்போதுமே வரலாற்றை பார்க்கையில், எந்த ஒரு தலைவன் வருகைக்காகவும் அது காத்திருந்ததில்லை. இருக்கிற ஒருவனை கையை பிடிச்சு கூட்டிட்டு போய் நடந்து விடும் என்கிறார்கள். இது உலகம் முழுவதும் இருக்கிற தத்துவ நிலைப்பாடு. அதில் விஜய் வரணும்னு நினைக்கிறார். அதற்கான வேலைகளை செய்கிறார். வரட்டும். வாழ்த்துவோம். என்ன கோட்பாடுகளை எடுத்து வைக்கிறோம், என்ன கொள்கைகளை முன்வைக்கிறோம், அதை மக்கள் ஏற்கும் பொழுது தான் வெற்றி பெறும். அதனால் ஒன்றே ஒன்று சொல்ல தோன்றுகிறது. ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மட்டும் பார்த்து வருகிறோம். விபத்து விதியாகிவிடாது. 

 

ஜெயலலிதா புது கட்சி தொடங்கியிருந்தால் அது ஜெயித்திருக்குமா என யோசிக்கணும். எம்.ஜி.ஆர் கட்டமைச்சு வைக்கப்பட்ட கட்சி அது. அவரே முதலில் கட்சி தொடங்க பயந்துட்டார். திமுகவிலிருந்து வெளியே போய்ட்டு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. திருப்பி கட்சியை சேர்த்துவிடலாம் என பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும்போது, சரி நின்னு தான் பாப்போம் என ஆரம்பிச்சார். அப்போது கலைஞர் மட்டும் தான் இருக்கிறார். ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், காமராஜர், பெரியார் என பெரிய தலைவர்கள் அனைவரும் மறைந்துவிட்டனர். கலைஞரை எதிர்க்க யாருமே இல்லை. கலைஞரும் எம்.ஜி.ஆரை அனுப்பி விடுகிறார். 

 

எம்.ஜி.ஆரை பார்த்து என்.டி.ஆரும் அங்கு கட்சி துவங்கிவிட்டார். அதன் பிறகு அங்கு கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி, பவன் கல்யாண் அந்த அளவிற்கு கட்சியை எடுத்துப்போக முடியவில்லை. இங்கேயுமே மிக வலிமையாக இருந்தது விஜயகாந்த். அவங்களும் உறுதியாக நின்றார்கள். கடுமையாக உழைத்தார்கள். 10 விழுக்காடு வரை தொட்டார்கள். அதனால் நின்னு சண்டை செய்யணும். விஜயகாந்த் நின்னு சண்டை செய்யாமல் ஜெயலலிதாவிடம் கூட்டணிக்கு சென்றதால் அங்கு சரிந்துவிட்டார். 

 

ஏனென்றால் நாம் எடுத்து வைப்பது மாற்று. அப்படி இருக்கையில் அந்த கட்சிகளோடு திரும்ப கூட்டணி வைக்கும் பொழுது அது மாற்று இல்லாமல் ஏமாற்றாக மாறி விடுகிறது. அதனால் நிலைச்சு நிக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை நெருங்க முடியும். ஒரே நாளில் ஒரே நொடியில் வெற்றி என்பதை சாத்தியப்படுத்த முடியாது. அப்படி நடந்தால் அது பெரும் புரட்சி ஆகிவிடும். அப்படிப்பட்ட விஷயம் இருக்கிறதா என்றால் அது யோசிக்க வேண்டும். அதனால் விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துகிறேன்" என்றார். மேலும் தொடர்ந்து விஜய் குறித்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்க, "ஓர் அளவிற்கு மேல பேச முடியாது. ஏன்னா என் அன்பிற்குரிய தம்பி அவர்" என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்