தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். அதன்படி தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். நாக சைதன்யாவுக்கு நடிகை ஷோபிலா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்டில் திருமண நிச்சயதார்த்த நடந்தது.
இந்த சூழலில் தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா விவகாரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பிரபல நடிகர் மற்றும் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா, அவரின் மனைவி நடிகை அமலா, நாக சைத்தன்யா மற்றும் தெலுங்கு திரையுலகை சார்ந்த சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், நானி, என பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சமந்தா இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், எனது விவகாரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும் அதில் எந்த அரசியல் சதியும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். இதையடுத்து அமைச்சர் கொண்டா சுரேகா, தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து நாகர்ஜுனா அமைச்சர் கொண்டா சுரேகா மீது நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ், கொண்ட சுரேகாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு சுரேகாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சுரேகாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இது போன்ற பேச்சுகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொன்ன நீதிமன்றம், அமைச்சர் கூறிய கருத்து தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் இருந்து உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.