இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா மௌனம் காத்து வந்தார். ஒருவழியாக மௌனம் கலைத்த அவர், வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எஸ்.வி சேகர், எமகாதகன் பட இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அவர் பேசியதாவது, “எனக்கு சினிமாவில் ரொம்ப பிடிச்ச நபர் அமீர். ஏனென்றால் அவருடைய சொந்த பெயரை, அதாவது முஸ்லீம் என்றால் அதை மறைக்காமல் வெளிப்படையாக சொல்லகூடிய தைரியம் மிகுந்த நபர்.
சினிமாவிற்கு சாதி, மதம், மொழி இப்படி எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட சினிமாவில் சமீபத்தில் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட்டிருக்க கூடாது. ஒரு தயாரிப்பாளர் கிட்ட எவ்ளோ வேண்டுமானாலும் பணம் இருக்கலாம். ஆனால் அதை ஒரு இயக்குநர் தான் ஸ்கீரீனுக்கு கொண்டு வருகிறார். ஒரு படம் ஜெயித்த பிறகு, 10 வருஷம் கழித்து தப்பா பேசுவது சரியான விஷயம் கிடையாது. ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு தான் கேட்க வேண்டும். வருத்தம் தெரிவித்தால் அவர் யாரை சொல்கிறாரோ அவருக்கு தான் வருத்தமா இருக்கும்.
நமக்கு பிடிச்சத ஒருவன் செஞ்சா அவன ஆகா ஓகோ-னு புகழ்ந்து பேசனும், பிடிக்காதத ஒருவன் செஞ்சிட்டா என்ன வேணா பொதுவெளியில் பேசலாம் என்பது தவறான ஒரு விஷயம். ஞானவேல் வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர் பேட்டி கொடுத்த வீடியோவை டெலிட் செய்ய சொல்ல வேண்டும். ஒருவரை குறை சொல்வதற்கு முன்னாடி நாம சரியாக இருக்கோமா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பார்க்காத வரைக்கும் எதுவுமே சரியா வராது. கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெறுப்பு இருக்க கூடாது என்பது என்னுடைய பாலிசி” என்றார்.