
பா.ஜ.க.வின் தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு எதிர்த்து வருவதால் இரு அரசுக்கும் பிரச்சனை நீடித்து வரும் சூழலில் தற்போது நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களை விமர்சித்துள்ளார்.
அவர் நடத்தி வரும் ஜன சேனா கட்சியின் 12வது ஆண்டு விழா ஆந்திரவில் உள்ள காக்கிநாடா பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இந்தியாவுக்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை. சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள், அதே நேரத்தில் நிதி ஆதாயத்திற்காகத் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள்? இந்தி சினிமாவில் இருந்து பணம் வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் இந்தி மொழியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன மாதிரியான லாஜிக்” என்றிருந்தார்.
இவரது பேச்சிற்கு தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் எனச் சொல்வது, அம்மொழியை வெறுக்கும் செயல் அல்ல. எங்கள் தாய்மொழியையும், தாயையும் பெருமையுடன் பாதுகாப்பது என்று யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.