Skip to main content

"சுமுகமாக நடைபெறவே என் கருத்தைப் பதிவிட்டேன்" - மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

parthiban apologies for his statement about  ar rahman concert issue

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதோடு கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

 

இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் தங்களது டிக்கெட் நகலைப் பகிரவும், குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர். இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம், "ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இந்த குளறுபடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். இதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறோம்" என ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் பேசியிருந்தார்.

 

இதையடுத்து டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி நடந்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாகப் பலரும் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் பார்த்திபன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், "மறக்குமா நெஞ்சம், மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. ஏ.ஆர். ரஹ்மான், தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக்கொள்வதாக முன் வந்திருக்கிறார். அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்.

 

என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையே தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து 'பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்து கொள்ளுங்கள்' எனக் கூறியதாக ராஜ உபசாரம் எனக்கு. தான் சம்பந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர். தான் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும். அவரின் இசையைத் தொடர்ந்து கொண்டாடுவோம். பாசிட்டிவிட்டியை பரப்புங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். 

 

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மற்றொரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பதிவிடுவன யாவும், நான் அறிந்ததும் நான் உணர்வதும். அக்கருத்து அனைவரையும் திருப்திப்படுத்தி விட முடியாது. நான் பதிவிட்டதில் முதல் வரி பொதுமக்களின் இன்னல்கள் வருத்தத்திற்குரியது என்பதே. ஏ.ஆர். ரஹ்மான் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்த போஸ்டை பார்த்த பின்பே இது சுமுகமாக நடைபெற வேண்டும் என்றே என் கருத்தை பதிவிட்டேன். அதிலிருந்த ஒரு வரியை பின்னர் நீக்கிவிட்டேன். காரணம் செய்தி தேவையில்லாமல் திசை திரும்புவதால். 

 

நான் மதிக்கும் ஒருவர் என்னை எவ்வளவு மதிக்கிறார் என்பதை கேள்விப்படும் போது மகிழ்வாகத்தானே இருக்கும்.(So நான் பதிவிடுவது எனக்கு சரியெனப்படுவது) அது தவறென சிலருக்குப் படுவதால் அதை நீக்கினேன். மற்றபடி என் வார்த்தைகளும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பொதுமக்கள் பட்ட சிரமத்தை பணத்தால் ஈடுகட்டி விடமுடியாது. ஆனால் பண நஷ்டத்தையாவது ஈடு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமும். ஏ.ஆர். ரஹ்மான் நல்ல மனம் படைத்தவர். தவறுக்கு தானே பொறுப்பு எடுத்துக் கொள்வதாக சொல்லியிருப்பதாலும் தான் அவருடன் துணை நிற்பதாகப் பதிவிட்டேன். நல்லது நடக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

புதிய உலக சாதனை படைத்த பார்த்திபனின் 'டீன்ஸ்' 

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Parthipans Teenz breaks new world record

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.