பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான போது கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது.
இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இப்படத்துக்கு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், தெலுங்கானாவில் 10,000 டிக்கெட்கள் இலவசமாக வழங்கவுள்ளதாகவும் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் இந்தியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இப்படத்தை காண்பித்து உதவ 10, 000 டிக்கெட்டுகள் புக் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இன்று திரையரங்கில் ஆதிபுருஷ் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கையில் திரையரங்கின் ஜன்னல் வழியே குரங்கு ஒன்று எட்டிப் பார்த்தது; தீவிரமான பக்தர்களால் ஆஞ்சநேயரே ஆதிபுருஷ் பார்க்க வந்துவிட்டார் என நினைத்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.