'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களைத் தொடர்ந்து மோகன்.ஜி இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தை 'ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிக்க, செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் ஜி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், "திரௌபதி இந்த சமுகத்தில் நடந்த விஷயம் தான். விழுப்புரம், கடலூர், மதுரை, திருநெல்வேலி என எல்லா ஊர்களிலும் நடந்துள்ளது. அதை தான் படமாக எடுத்தேன். எதுவும் நடக்காமல் படமாக எடுக்கவில்லை. நான் எடுத்த கதை, அப்படி ஒரு அடையாளத்தை எனக்கு தந்துவிட்டது. உண்மையிலே சாதி இருக்கா என்று கேட்டால்... இருக்கு. சமீபத்தில் அதை தானே வெற்றிமாறன் சாரும் பேசியிருந்தார். சாதி இருக்கு ஆனால் அது அவருக்கு தேவைப்படவில்லை.
அடித்தட்டு மக்கள் மேலே வருவதற்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இதை தான் நானும் சொன்னேன். அன்னைக்கு நான் சொன்னதுக்கு திட்டுனாங்க. இன்றைக்கு வெற்றிமாறன் சொன்னா பாராட்டுறாங்க. இந்த கருத்தை யார் சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம். நான் சொன்னா திட்டுவாங்க. அவுங்க சொன்ன பாராட்டுவாங்க. அவ்வளவு தான் வித்தியாசம்" என்றார்.