பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் வந்த நிலையில், பெரும் சர்ச்சை உண்டானது.
மேலும், கோவாவில் 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அவ்விழாவின் தேர்வுக்குழு தலைவர் வெறுப்புணர்வைத் தூண்டுவதாக இருக்கிறது என விமர்சித்திருந்தார். இப்படி பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, தற்போது தி வேக்ஸின் வார் (The Vaccine War) என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் கோரோனோவிற்கு எதிரான இந்தியாவின் போரின் அடிப்படையிலும், உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மருத்துவத் துறை எடுத்த முயற்சிகளின் அடிப்படையிலும் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
இப்படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அமெரிக்காவில் நேற்று திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த மாதவன் பட இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி, மிகவும் சவாலான காலகட்டத்தில் தேசத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்த இந்திய விஞ்ஞான சமூகத்தின் அற்புதமான தியாகங்கள் மற்றும் சாதனைகள் வியப்படைய செய்தது.
கதை சொல்லுவதில் மாஸ்டராக இருக்கும் விவேக் அக்னிஹோத்ரி இக்கதையை இயக்கியுள்ளார். அவர் உங்களை ஒரே நேரத்தில் உற்சாகப்படுத்தவும், கைதட்டவும், அழவும், மகிழ்ச்சியாகவும் ஆக்குபவர்" என குறிப்பிட்டு படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளை பாராட்டினார். மேலும், "படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பாருங்கள். லாக்டவுன் காலகட்டத்தில் நாம் உயிர்வாழ உதவிய பெண்களுக்காக டிக்கெட்டை வாங்குங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.