
'லைகா மொபைல்' என்ற தொலைத் தொடர்பு நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் செல்போன் சேவை இணைப்பு வழங்கி வருகிறது. இந்த லைகா குழுமத்தின் நிறுவனராக இருக்கும் சுபாஸ்கரன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
லைகா குழுமம் லைகா ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. அதைத் தொடர்ந்து இவர்கள் தயாரிப்பில் வெளியான 'வடசென்னை', '2.0' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்போது ரஜினி - த.செ ஞானவேல் படம், அஜித்தின் விடாமுயற்சி படம் என பல்வேறு படங்களை தயாரித்து வருகிறது.
கடைசியாக இவர்கள் தயாரிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படம் இந்த வருடத்தின் அதிக வசூல் ஈட்டியுள்ள படமாக படக்குழு தெரிவித்தது. இப்படத்தின் மூலம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த வருவாயில் கணக்கு முறையாகக் காட்டவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த நிலையில் அந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. சோதனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.